மணலியில் பழைய டயர் குடோனில் பயங்கர தீ விபத்து 5 மணிநேரம் போராடி அணைத்தனர்

மணலியில் பழைய டயர் குடோனில் தீ விபத்து ஏற் பட்டது. தீயணைப்பு வீரர் கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Update: 2019-04-17 22:30 GMT
திருவொற்றியூர், 

மணலி கண்ணியம்மன்பேட்டை பகுதியில் கோபிநாத்(வயது 35) என்பவருக்கு சொந்தமான பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் குடோன் உள்ளது. இங்கு மறுசுழற்சி செய்யப்படும் டயர்கள், கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

நேற்று மதியம் 1 மணியளவில் குடோனுக்கு மேலே தாழ்வாக சென்ற மின்கம்பி அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த பழைய டயர்களில் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. டயர்களில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் பல அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. மணலி, விச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மணலி, மாதவரம், கொருக்குபேட்டை போன்ற பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 மணி நேர போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் ரூ.18 லட்சம் மதிப்பிலான பழைய டயர்கள் உள்பட பொருட்கள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமாயின. இதுபற்றி மணலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்