தங்கையின் திருமணத்துக்கு கொடுத்த நகையை திருப்பி கேட்ட பெண்ணை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி தாய்-மகனுக்கு போலீசார் வலைவீச்சு

தங்கையின் திருமணத்துக்கு கொடுத்த நகையை திருப்பி கேட்ட பெண்ணை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற தாய்-மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-04-17 22:00 GMT
திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு கீழ தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 48). இவர்களுடைய மகள் பவித்ரா. இவருக்கு திருமணமாகி, மும்பையில் கணவருடன் வசித்து வருகிறார். விஜயலட்சுமி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். பாஸ்கர் 2-வதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் விஜயலட்சுமி தன்னுடைய தங்கை பப்பியின் திருமணத்துக்காக தனது 5 பவுன் தங்க நகையை கொடுத்தார். பின்னர் பல ஆண்டுகளாகியும் பப்பி நகையை திருப்பி தரவில்லை. இதுகுறித்து விஜயலட்சுமி தன்னுடைய தாயார் மணியம்மாளிடம் அடிக்கடி நகையை கேட்டு வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் விஜயலட்சுமி அங்குள்ள ரேஷன் கடையில் சென்று மண்எண்ணெய் வாங்கி கொண்டு தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு அவருடைய தாயார் மணியம்மாள், தம்பி ஜெயச்சந்திரசேகர் ஆகிய 2 பேரும் இருந்தனர். அப்போது ஜெயச்சந்திரசேகர் தன்னுடைய அக்காள் விஜயலட்சுமியிடம், அடிக்கடி நகையை கேட்டு தாயாரை தொந்தரவு செய்யக் கூடாது என்று கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த ஜெயச்சந்திரசேகர், விஜயலட்சுமியிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி, அங்குள்ள குப்பையில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார். பின்னர் அவர் தன்னுடைய அக்காள் விஜயலட்சுமியை தீயில் தள்ளி விட்டார்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, விஜயலட்சுமியை காப்பாற்றினர். அவருக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஜெயச்சந்திரசேகர், மணியம்மாள் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொடுத்த நகையை திருப்பி கேட்ட பெண்ணை தம்பியும், தாயாரும் சேர்ந்து தீயில் எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்