சங்கரன்கோவிலில் குடிநீர் கேட்டு, பொதுமக்கள் போராட்டம்

சங்கரன்கோவிலில் குடிநீர் சீராக வழங்ககோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-17 21:45 GMT
சங்கரன்கோவில், 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 7-ம் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், மானூர் கூட்டு குடிநீர் திட்டம், புளியங்குடி கோட்ட மலையாறு கூட்டு குடிநீர் திட்டம் சார்பில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் நடைபெற்று வந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் சங்கரன்கோவில் நகரசபை சார்பில், லாரி மூலம் வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 18 நாட்களாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று அந்த பகுதியில் சங்கரன்கோவில்- ராஜபாளையம் மெயின்ரோட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகரசபை அலுவலர் சிவராமன், சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், சங்கரன்கோவிலில் சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் முறையாக நடைபெறுகிறது. எங்கள் பகுதி மக்களை நகரசபை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மேலும் மக்களுக்கு தண்ணீர் இல்லாத நேரத்தில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் அடிக்கடி டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்