பழனியில், விதிமீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

விதிமீறும் வாகனங்களால் பழனி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Update: 2019-04-17 22:30 GMT
பழனி, 

பழனி பஸ்நிலைய பகுதியில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும். இங்கு காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் பஸ்நிலையம் அருகே திண்டுக்கல் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே பாதி அளவு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றன.

தற்போது மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. இந்த பணியால் பழனி பஸ்நிலையத்தில் இருந்து சண்முகநதி, கீரனூர் பகுதிக்கு செல்லும் டவுன் பஸ்கள் மட்டும் திண்டுக்கல் சாலை வழியாக குளத்து ரவுண்டானா வழியே சென்று புதுதாராபுரம் சாலையில் செல்ல வேண்டும். ஆனால் சண்முகநதி, கீரனூர் பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் மேற்கு நுழைவு வாயில் வழியே பஸ்நிலையம் செல்ல வேண்டும்.

ஆனால் மாறாக போக்குவரத்து விதிகளை மீறி குளத்து ரவுண்டானா, திண்டுக்கல் சாலை வழியே பஸ்கள், கனரக வாகனங்கள் வருவதால் பஸ்நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அருகேயுள்ள வணிக வளாகம் முன்பு சாலையோரத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதால் வாகனங்கள் கடந்து செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே விதிமீறும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்