அரியலூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல்; வீடுகளை அடித்து உடைத்ததால் பதற்றம் போலீசார் குவிப்பு

அரியலூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2019-04-18 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிழக்கு பகுதியில் மணிமேகலை என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் மாற்றுத்திறனாளியான வீரபாண்டியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவர் வீரபாண்டியனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிலர் பானை ஒன்றை சாலையில் போட்டு உடைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி அருகே சென்றுகொண்டு இருந்த சுப்பிரமணியன்(வயது 47) என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் அருகே இருந்த காலனி தெருவிற்குள் புகுந்து அங்கிருந்த ஓட்டு வீடுகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தில் ரவி, செல்வராஜ், அஜய், தேவர் ஆகிய 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு மொபட்டிற்கு தீ வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவரை கடுமையாக தாக்கினர். படுகாயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்