வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்த அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் 6 பேர் கைது ரூ.36 ஆயிரத்து 660 பறிமுதல்

வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்த அ.தி.மு.க.வினர், அ.ம.மு.க.வினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரத்து 660 பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-04-18 21:45 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தளி சட்டமன்ற தொகுதியின் சாரண்டப்பள்ளி கிராமத்தில் கூட்டுறவு வங்கி அருகில் சிலர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதாக தேர்தல் பிரிவுக்கு புகார் வந்தது.

இதையடுத்து பறக்கும் படை அதிகாரி பாஸ்கரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க நின்ற மாயநாயக்கனப்பள்ளி மஞ்சுநாத் (வயது 31), பாபு (35), சந்திரமோகன் (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் அ.தி.மு.க. பிரமுகர்கள் ஆவார்கள். அவர்களிடம் இருந்து ரூ.23 ஆயிரத்து 400 மற்றும் வாக்காளர் பட்டியல் 3, முகவர் படிவம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல் சோமார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க நின்று கொண்டிருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் (47), அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கோபால் (32), விஜயகுமார் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 260 மற்றும் வாக்காளர் பட்டியல் 4 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்