எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2019-04-18 22:30 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் எட்டுக்குடியில் பல்வேறு சிறப்புகள் பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. கோவிலின் எதிர்புறத்தில் சரவண பொய்கை என்ற தீர்த்த குளம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகன் வெள்ளிமயில் வாகனத்தில் இரண்டு தேவியர்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் சித்திரா பவுர்ணமி திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சாமி இந்திர விமானம், புஷ்ப பல்லக்கு, கைலாச வாகனம், மஞ்சம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், இடும்ப வாகனம், யானை வாகனம், புஷ்ப விமானம், ஓலைச்சப்பரம், குதிரை வாகனம் ஆகியவற்றில் வீதி உலா காட்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணியளவில் ஆறுமுகவேலவர் தேருக்கு எழுந்தருளினார். பின்னர் காலை 10 மணியளவில் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம், ஆய்வாளர் பக்கிரிசாமி உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.

தேர் முக்கிய வீதிகளின் வழியாக வந்து மீண்டும் நிலையை சென்றடைந்தது. அதைத்தொடர்ந்து இரவு சாமி தேரில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளினார். பின்னர் சாமிக்கு பிராயச்சித்தா அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான சித்திரா பவுர்ணமி காவடி அபிஷேகம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

மேலும் செய்திகள்