பிளஸ்-2 தேர்வில் 618 பேர் வெற்றி: 24-வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி அமலோற்பவம் பள்ளி சாதனை

பிளஸ்-2 தேர்வில் 24-வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சிபெற்று அமலோற்பவம் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2019-04-19 23:07 GMT
புதுச்சேரி,

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வினை புதுவை அமலோற்பவம் பள்ளி மாணவ, மாணவிகள் 618 பேர் எழுதினர். இதில் அனைவரும் வெற்றிபெற்றுள்ளனர். தொடர்ந்து 24-வது ஆண்டாக அமலோற்பவம் பள்ளி 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து பள்ளியின் தாளாளரும், முதுநிலை முதல்வருமான லூர்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வு எழுதிய 618 மாணவ, மாணவிகளும் வெற்றியை பெற்றுள்ளனர். 600-க்கு 588 மதிப்பெண்ணை மாணவி திவ்யா பெற்றுள்ளார். 75 சதவீதத்துக்கு மேல் 308 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.

முதல் வகுப்பில் 284 பேர் வெற்றியடைந்துள்ளனர். 550 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் 15 பேரும், 500-க்கு மேல் 116 பேரும், 450-க்கு மேல் 308 பேரும் பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர், பொருளாதாரம் ஆகிய பாடங்களில் தலா ஒருவரும், கணக்கியல் பாடத்தில் 3 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு தலா 2 கிராம் தங்கக்காசுகள் வழங்கப்படும். புதுவை மாநிலத்திலேயே நாங்கள்தான் அதிக மாணவ, மாணவிகளை தேர்வுக்கு அனுப்பி அவர்களை வெற்றிபெற செய்கிறோம். அதுவே மிகப்பெரிய சாதனை. இந்த சாதனைக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. சோதனைகள், நெருக்கடிகள் பல இருந்தும் நாங்கள் பல சாதனைகளை படைக்கிறோம். இதற்காக இறைவனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு லூர்துசாமி கூறினார்.

மேலும் செய்திகள்