கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணம்– காசோலைகளை தவறவிட்ட வங்கி மேலாளர் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்

கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வங்கி மேலாளர் ஒருவர் தனது பணம்– காசோலைகள் மற்றும் அடையாள அட்டைகளை தவறவிட்டார். இதை போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2019-04-21 22:45 GMT
நாகப்பட்டினம்,

நெல்லையை சேர்ந்தவர் ராம்குமார்(வயது61). ஓய்வு பெற்ற வங்கி மேலாளரான இவர் நாகையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்ல சென்னையில் இருந்து காரைக்கால் செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது குடும்பத்துடன் புறப்பட்டார். நாகை ரெயில் நிலையத்தில் குடும்பத்துடன் இறங்கிய அவர் தனது உறவினர் வீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது அவர் தனது மணிபர்ஸ் மாயமாகி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்து நாகை ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.


உடனே நாகை ரெயில்வே போலீசார் இது குறித்து காரைக்கால் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து காரைக்காலுக்கு வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் ஏறி ராம்குமார் பயணம் செய்த பெட்டியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அவர் பயணம் செய்த இருக்கையின் கீழ் ராம்குமாரின் மணிபர்ஸ் கிடந்தது. மணிபர்சை மீட்ட போலீசார் அதை காரைக்காலில் இருந்து நாகைக்கு வந்த மற்றொரு ரெயிலின் டிக்கெட் பரிசோதகரிடம் கொடுத்து அனுப்பினர்.

நாகை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரிடம் ராம்குமாரின் மணிபர்சை டிக்கெட் பரிசோதகர் கொடுத்தார்.

 இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மணிபர்சை ராம்குமாரிடம் ஒப்படைத்தனர். ரெயிலில் தவறவிட்ட மணிபர்சில் ரூ.7 ஆயிரத்து 430, 4 காசோலைகள், அடையாள அட்டைகள் மற்றும் விசா ஆகியவை இருந்தன.

மணிபர்சை மீட்டுக்கொடுத்த ரெயில்வே போலீசாருக்கு ராம்குமார் நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்