அந்தியூர் பள்ளியபாளையத்தில் குடிநீர் சீராக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

அந்தியூர் பள்ளியபாளையத்தில் குடிநீர் சீராக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-04-21 22:00 GMT
அந்தியூர், 

அந்தியூர் அருகே பள்ளியபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 7.30 மணி அளவில் காலிக்குடங் களுடன் அந்தியூரில் உள்ள மேட்டூர் ரோட்டுக்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் குடிநீர் வழங்காததை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் துணை தாசில்தார் அழகேசன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வருணியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘பள்ளியபாளையத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இங்கு பாதுகாக்கப்பட்ட ஆற்று நீர் மேல்நிலைத்தொட்டியின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக சீராக தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதன் காரணமாக தண்ணீர் வழங்க வேண்டும் எனக்கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால்தான் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள் கூறுகையில், ‘குடிநீர் குழாயில் பழுதடைந்து உள்ளதால் சீராக தண்ணீர் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது குடிநீர் குழாய்கள் சரிசெய்யப்பட்டு, விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு, காலை 8.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதைத்தொடர்ந்து வாகனங்கள் அனைத்து செல்லத்தொடங்கின. பொதுமக்களின் சாலைமறியல் போராட்டத்தினால் பள்ளியபாளையத்தில் உள்ள அந்தியூர்-மேட்டூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்