கும்பகோணம் சுந்தரமகாகாளியம்மன் கோவிலில் படுகள காட்சி உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம் சுந்தரமகாகாளியம்மன் கோவிலில் படுகள காட்சி உற்சவம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-04-21 22:30 GMT
கும்பகோணம்,

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில் மொட்டை கோபுர வாசல் அருகே சுந்தரமகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாவையொட்டி படுகள காட்சி உற்சவம் நடைபெறுவது வழக்கம். பச்சைக்காளி, பவளக்காளி ஆகிய இரு வரும் அக்காள்-தங்கை ஆவார். தங்கையான பவளக்காளிக்கு ஏராளமான குழந்தைகள் உண்டு. அக்காள் பச்சைக்காளிக்கு குழந்தைகள் இல்லை.

ஒரு முறை தன் தங்கையின் குழந்தைகளை பார்ப்பதற்காக அக்காள் பச்சைக்காளி தின்பண்டங்களை வாங்கி கொண்டு, தங்கை பவளக்காளி வீட்டுக்கு வருகிறார். அக்காவுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் தம் குழந்தைகளை பார்த்து அக்காள் பொறாமை கொள்வார் என கருதி, பச்சைக்காளி வரும் சமயத்தில் தனது குழந்தைகளை பவளக்காளி சேலையால் மூடி வைத்து விடுகிறார். தங்கையின் இந்த செயலால் ஆத்திரம் அடைந்த பச்சைக்காளி, குழந்தைகளை கற்சிலைகளாக மாற்றி விடுகிறார்.

இதனால் மனம் வருந்திய பவளக்காளி, பச்சைக்காளியிடம் மன்னிப்பு கேட்டு, அவரை மீண்டும் வீட்டுக்கு அழைக்கிறார். அதன் பிறகு பச்சைக்காளியும் மன்னிப்பு வழங்கி, புனித நீர் தெளித்து குழந்தைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார். இந்த நிகழ்வு படுகள காட்சி உற்சவமாக ஆண்டுதோறும் சுந்தரமகாகாளியம்மன் கோவிலில் நடைபெறுகிறது.

வழக்கம்போல் இந்த ஆண்டு கோவிலில் 128-வது ஆண்டு திருவிழா கடந்த 11-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 19-ந் தேதி பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான படுகள காட்சி உற்சவம் நேற்று நடந்தது. இதில் பக்தர்களை குழந்தைகளாக கருதி அவர்கள் சேலையால் மூடப்பட்டு, மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பச்சைக்காளி-பவளக்காளி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவில் இன்று (திங்கட்கிழமை) பச்சைக்காளி, பவளக்காளி வீதி உலா நடக்கிறது. 24-ந் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்