பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி: போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியானதை தொடர்ந்து போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-04-21 23:00 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 45). விவசாயி. இவருக்கு குன்னம் செல்லும் சாலையில் வயல் உள்ளது. வழக்கம் போல் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்று கொண்டிருந்தார். வெண்மணி பிரிவு சாலை அருகே சென்று கொண்டு இருந்தபோது அரியலூரில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ராஜேந்திரன் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குன்னம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மேலமாத்தூர் பொதுமக்கள் சம்பவ இடத்தில் ஒன்றுகூடி அரசு பஸ்சை சிறைபிடித்தனர். அப்போது சிலர் பஸ் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தனர். இதையடுத்து அடிக்கடி விபத்து நடைபெறும் வெண்மணி பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், நீண்ட நாட்களாக வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்