பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-04-21 22:45 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் பெரும்பாலானவர்கள் விவசாய தொழிலை செய்து வருகின்றனர். குறிப்பாக அவர்களில் பலர் கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பாலை கறந்து விற்பனை செய்து குடும்ப செலவை கவனித்து வருபவர்கள் அதிகமாக உள்ளனர். தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையான வெயில் அடித்து வருவதால் மாடுகள் வெப்பம் தாங்க முடியாமல் நிழலில் கட்டப்பட்டிருக்கும் போது கூட அதிக அளவு மூச்சு வாங்குகிறது. இதனால் விவசாயிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் மாடுகளை குளிப்பாட்டி இளைப்பாற செய்கின்றனர்.

மேலும் மாடுகள் வெப்பத்தினால் அதிக மூச்சு வாங்குவதால் சணல் சாக்குகளை தண்ணீரில் நனைத்து மாடுகளின் மேல் ஈரத்துடன் போர்த்துகின்றனர். இதுகுறித்து விவசாயி கருப்பையா உள்பட சில விவசாயிகள் கூறுகையில், கடுமையான வெயில் அடித்து வருவதால் 8 லிட்டர் பால் கறக்கும் மாடுகள் தற்போது 5 லிட்டர் மட்டுமே கறக்கிறது. மாடுகளுக்கு பச்சை புல், தீவனம் பயிர் கிடைக்காமல் வைக்கோல், சோளத்தட்டை போன்ற காய்ந்த தீவனங்களையே மாடுகளுக்கு கொடுக்க நேரிடுகிறது. இதனாலும் பாலின் அளவு தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் வருவாயும் குறைந்து விட்டது. இதேபோல் மழை பெய்யாமல் தொடர்ந்து வெயில் அடித்து வந்தால் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஏற்படும். எனவே விவசாயிகளின் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறினர். 

மேலும் செய்திகள்