திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் கடத்த இருந்த ரூ.4 லட்சம் பறிமுதல்

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் கடத்த இருந்த ரூ.4 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-21 23:00 GMT
செம்பட்டு,

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அங்கிருந்தும் விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சிலர் தங்கம், மின்னணு பொருட்கள், வெளிநாட்டு பணம் போன்றவற்றை கடத்தி வருவார்கள்.

இதை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். கடந்த சில நாட்களாக இவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் பல பயணிகளிடம் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு இந்திய பணத்தை விமானத்தில் கடத்த முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு மலிண்டோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற இருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பெரம்பலூரை சேர்ந்த தர்மராஜ் (வயது 48) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளை தனது உடையில் மறைத்து மலேசியாவுக்கு கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 200 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம், அந்த பணத்தை எதற்காக அவர் கொண்டு செல்ல முயன்றார்? அதை கொடுத்து அனுப்பியது யார்? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்