வறண்டுபோன அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

வறண்டுபோன அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2019-04-21 22:45 GMT
கரூர்,

திருப்பூர் மாவட்டம் அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து, 90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டும் போது தான் உபரி நீர் கரூர் அமராவதி ஆற்றில் வழிந்தோடும். அமராவதி ஆறானது கரூர் நகர் வழியாக சென்று திருமுக்கூடலூரில் செல்லும் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதன் காரணமாக கரூர் நகரின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கான பாசனத்திற்கும் அமராவதி ஆறு முக்கிய பங்காற்றுகிறது. எனினும் தற்போது கோடைக்காலம் என்பதால் அமராதி அணையில் இருந்து நீர்வரத்து ஏதும் இல்லை. இதன் காரணமாக கரூர் நகர்புற பகுதியில் ஓடும் அமராவதி ஆறானது வறட்சியின் பிடியில் சிக்கி மணற்பாங்காக காட்சி அளிக்கிறது. இதனால் குடிநீர் பிரச்சினை சில கிராமங்களில் தலைவிரித்தாடுகிற நிலையில் பொதுமக்கள், ஆற்றில் ஊற்று தோண்டி நீர் எடுத்து வருவதையும் காண முடிகிறது.

கழிவுநீர் பாய்ந்தோடுகிறது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூர் லைட்அவுஸ் கார்னர் பகுதியில் ஓடும் அமராவதி ஆற்றில் சீமைக்கருவேலமரங்கள் மற்றும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக புதர் மண்டி இருந்த அமராவதி ஆறானது, நீர் மாசுபாடு ஏதும் ஏற்படாத வகையில் தூய்மையான நிலைக்கு மாறியது. தற்போது ஆற்றில் நீரோட்டம் இல்லை. எனினும் கரூர் லைட்-அவுஸ் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது. இதில் தண்ணீர் தேடி வரும் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்கினங்கள் அதில் புரண்டு எழுந்து செல்வதை பார்க்க முடிகிறது.

உடனடி நடவடிக்கை தேவை

தற்போது கோடை மழை பெய்தாலும் கூட, ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நீர் மாசுபாடு அடைய வாய்ப்புள்ளது. எனவே கரூர் அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். எங்கிருந்து கழிவுநீர் வருகிறது? யார் அதனை திறந்து விடுகிறார்கள்? என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டால், அங்கு வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் அமராவதியின் கிளை வாய்க்கால் களான இரட்டை வாய்க்கால், திருமா நிலையூர் ராஜவாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களை தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 

மேலும் செய்திகள்