ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2019-04-21 22:30 GMT
நாகர்கோவில்,

ஏசுநாதர் உலகத்தை பாவச்சேற்றில் இருந்து மீட்பதற்காக பெத்லகேம் என்ற சிற்றூரில் பிறந்தார். அவரது நற்போதனைகள், மனித குலத்தை வாழ்விக்கும் மந்திர சொற்களாக அமைந்தன. அதை கண்டு பொறாமை கொண்டவர்கள் அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவரை சிலுவையில் அறைந்து கொன்றனர்.

சிலுவையில் உயிர்நீத்த ஏசுநாதர் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். அவர் உயிர்த்தெழுந்த திருநாளைத்தான் ‘ஈஸ்டர் பண்டிகை‘ யாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அதன்படி நேற்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் அந்தந்த பங்குகளை சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதே போல மற்ற தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

சிறப்பு பிரார்த்தனை

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் கோவிலில் நடந்த ஈஸ்டர் பண்டிகை நிகழ்ச்சியில் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை பங்கேற்று சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

குமரி மாவட்ட சி.எஸ்.ஐ. ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நேற்று அதிகாலை நடந்தது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே உள்ள சி.எஸ்.ஐ. ஹோம் சர்ச்சில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பிரார்த்தனையின் முடிவில் ஒருவருக்கொருவர் கைகொடுத்து ஈஸ்டர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதே போல் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. சேகர ஆலயத்தில் தலைமை போதகர் போவாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் விரிகோடு, காரவிளை உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்