அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக் கோரி போலீஸ்நிலையம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக் கோரி திருப்பத்தூரில் போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2019-04-21 22:15 GMT
திருப்பத்தூர்,

கடந்த 4 தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு சமூகத்தினரை அவமரியாதையாகப் பேசியதாக தகவல் பரவியதையடுத்து சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அந்த சமூகத்தினர் அவதூறு செய்திகளைப் பரப்பியவர்களை கைது செய்யக் கோரி சாலைமறியல், கடையடைப்பு போன்ற தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று திருப்பத்தூரில் திருத்தளிநாதர் கோவில் அருகே கூடிய அந்த சமூகத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு நான்குரோடு, காந்திசிலை மதுரை ரோடு வழியாக அண்ணாசிலையை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து தாலுகா அலுவலகம் சென்று தாசில்தார் தங்கமணியிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

தொடர்ந்து செட்டிய தெரு, பெரியகடை வீதி வழியாக ஊர்வலமாக வந்த கிராம மக்கள் அங்குள்ள போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் கலைந்து சென்றனர். முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

வஜ்ரா எனப்படும் கூட்டம் கலைக்கும் வாகனமும் வரவழைக்கப்பட்டிருந்தது. ஊர்வலம் நடந்த ஒரு சில மணி நேரங்கள் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றி விடப்பட்டன. ஊர்வலத்தில் குறிப்பிட்ட சமூகப் பெண்களை இழிவாகப் பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டு சென்றனர்.

இதேபோல காரைக்குடி அருகே உள்ள மாத்தூரில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று திரண்டு வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேரம் நீடித்த மறியல் போராட்டம் அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு கைவிடப்பட்டது.

காரைக்குடி நகரில் கீழ ஊரணி என்ற பகுதியில் காலையில் 150-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி கோஷமிட்டனர். அதன்பின்பு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்பு அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்