இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தயார்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

Update: 2019-04-21 23:00 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கடந்த 3 ஆண்டுகளில் 2-வது முறையாக இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளராக சீனிவேல், வெற்றிபெற்ற செய்தியை கூட அறியாமல் இறந்துபோனார். இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியில் அதே ஆண்டு நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றிபெற்றார். இதற்கிடையே அவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இறந்துபோனார். இதனால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் இடம் காலியானது. பின்னர் ஐகோர்ட்டில் வழக்கு நடந்ததால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தள்ளிப்போனது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அனைத்து கட்சியினரும், வாக்காளர்களும் எதிர்பார்த்தனர். இந்தநிலையில் அடுத்த மாதம் 19-ந்தேதி திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வருகிற 29-ந்தேதி மனு தாக்கல் முடிவடைகிறது. 30-ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது.

இதனால் தற்போது திருப்பரங்குன்றத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி திருப்பரங்குன்றத்தில் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தயாராக உள்ளன.

அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை உதவி தேர்தல் அதிகாரிகளான திருப்பரங்குன்றம் தாசில்தார் நாகராஜன், மதுரை தெற்கு தாசில்தார் அனிஷ் சத்தார், தேர்தல் பிரிவு மண்டல துணை தாசில்தார் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் செய்தனர். வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடக்கிறது. தேர்தல் நடத்தும் அலுவலரான பஞ்சவர்ணம் வேட்பு மனுக்களை பெறுகிறார்.

மேலும் செய்திகள்