திருவாரூரில் காட்சி பொருளாக மாறிய கண்காணிப்பு கேமராக்கள் அதிகாரிகள் கவனிப்பார்களா?

திருவாரூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் காட்சி பொருளாக மாறி விட்டன. இதை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2019-04-22 22:30 GMT
திருவாரூர்,

வீடுகள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்கள், ஆள்நடமாட்டம் இல்லாத பொது இடங்களில் நடைபெறும் வழிப்பறி சம்பவங்கள் ஆகியவற்றில் தொடர்புடைய நபர்களை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் போலீசாருக்கு பெருமளவு உதவி செய்து வருகின்றன.

சிலநேரம் கொலை சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை பிடிப்பதற்கு கூட கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுகின்றன. குற்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும், அதில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காகவும் திருவாரூர் நகரில் பல்வேறு இடங்களில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

திருவாரூர் பழைய பஸ் நிலையம், நகராட்சி, மேல கடைவீதி, துர்காலயா ரோடு, கல்பாலம் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். பல குற்ற வழக்குகளில் எந்தவித தடயமும் கிடைக்காத பட்சத்தில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில் திருவாரூர் நகரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பல தற்போது செயலிழந்து காட்சி பொருளாக மாறி விட்டன.

திருவாரூர் பழைய பஸ் நிலையம், கல்பாலம் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து கிடக்கின்றன. அவற்றை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் வேதனை. கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து கிடப்பதால் பெண்களிடம் சங்கிலி பறிப்பது, பணம் பறிப்பது உள்ளிட்ட குற்ற செயல்கள் அதிகரிக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

இதை போலீஸ் உயர் அதிகாரிகள் உடனடியாக கவனித்து நகரில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை பழுது நீக்கி செயல்பட வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்