திருமருகல் அருகே கார்-மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் உள்பட 3 பேர் படுகாயம்

திருமருகல் அருகே கார்-மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-22 22:45 GMT
திருமருகல்,

திருமருகல் அருகே நாகை - நன்னிலம் நெடுஞ்சாலையில் குருவாடி என்ற இடத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கார் டயர் வெடித்து தாய், மகன் படுகாயமடைந்தனர் இவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் விபத்துக்குள்ளான அந்த கார் கடந்த ஒரு வாரமாக அங்கேயே சாலையோரம் கிடக்கிறது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனிடையே விபத்துக்குள்ளான இந்த காரை உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் அதே இடத்தில் காரும், 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலை மறியல்

இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும், விபத்துக்குள்ளாகி ஒரு வாரமாக அப்புறப்படுத்தப் படாமல் கிடக்கும் காரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார், வேகத்தடை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் நாகை - நன்னிலம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்