தாராபுரம் பனங்காட்டு வலசு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

தாராபுரம் பனங்காட்டு வலசு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2019-04-22 22:30 GMT
திருப்பூர்,

தாராபுரம் கிளாங்குண்டல் கிராமம், பனங்காட்டு வலசு பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வந்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 5 மாதமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அருகில் உள்ள வளையக்காரன்வலசு என்ற கிராமத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வந்தோம்.

ஆனால் அவர்கள் தற்போது எங்கள் கிராமத்தினருக்கு தண்ணீர் கொடுக்க மறுத்து வருகின்றனர். நீலியம்மன் கோவில் அருகே உள்ள ஆழ்குழாய் கிணறு 4 ஊர்களுக்கு பொதுவாக போடப்பட்டது. ஆனால் வளையக்காரன்வலசு, வளையக்காரன்வலசு காலனி உள்ளிட்ட ஊரை சேர்ந்தவர்கள் மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

அவர்களும் அந்த குடிநீரை எங்களுக்கு தர மறுக்கிறார்கள். இதற்கு அதிகாரிகளும் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் நாங்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். இதனால் எங்கள் கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்