உடன்குடியில் கோஷ்டி மோதல்: தி.மு.க. நிர்வாகிக்கு அடி-உதை; 2 கார்கள் உடைப்பு 15 பேர் மீது வழக்குப்பதிவு

உடன்குடியில் தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நிர்வாகிக்கு அடி-உதை விழுந்தது. 2 கார்கள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2019-04-22 22:15 GMT
உடன்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பரமன்குறிச்சியை அடுத்த எள்ளுவிளையைச் சேர்ந்தவர் பாலசிங் (வயது 49). விவசாயியான இவர் தி.மு.க. ஒன்றிய செயலாளராக உள்ளார்.

உடன்குடி எம்.என். நகரில் வசிப்பவர் பிரபாகர் (35). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் தி.மு.க. தொண்டர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். உடன்குடி அருகே செட்டியாபத்தைச் சேர்ந்தவர் சிவநாதன் (34). தி.மு.க. பஞ்சாயத்து செயலாளரான இவர் உடன்குடி பஜாரில் பேன்சி கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவில் பாலசிங் உடன்குடி பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரபாகர், சிவநாதன் ஆகிய 2 பேரும் தங்களைப் பற்றி எதற்காக கட்சி மேலிடத்தில் தவறாக கூறினீர்கள்? என்று கூறி, பாலசிங்கிடம் தகராறு செய்து, அவரை அடித்து உதைத்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, பாலசிங்கை காப்பாற்றினர். இதில் படுகாயம் அடைந்த பாலசிங் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே பாலசிங்கின் ஆதரவாளர்களான தி.மு.க. உடன்குடி நகர செயலாளரான ஜான் பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரான ரவி ராஜா உள்ளிட்ட சிலர் பிரபாகரின் வீட்டின் முன்பு நின்ற காரின் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர். இதனை தடுக்க முயன்ற பிரபாகரன் மனைவி சீதாபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் சிவநாதனின் வீட்டின் முன்பு நின்ற காரின் கண்ணாடியையும் பாலசிங்கின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்து பாலசிங் அளித்த புகாரின்பேரில், பிரபாகர், சிவநாதன் ஆகிய 2 பேர் மீதும், பிரபாகரன் மனைவி சீதாபதி, சிவநாதன் அண்ணன் ரங்கநாதன் ஆகியோர் அளித்த புகார்களின்பேரில், பாலசிங், ஜான் பாஸ்கர், ரவி ராஜா உள்ளிட்ட 13 பேர் மீதும் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடன்குடியில் இரவில் தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்