ஆறுமுகநேரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; பிளஸ்-2 மாணவர் பலி நண்பர் படுகாயம்

ஆறுமுகநேரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-04-22 21:45 GMT
ஆறுமுகநேரி, 

காயல்பட்டினம் தீவுத் தெருவை சேர்ந்தவர் முகமது அப்துல்காதர். இவருடைய மகன் அகமது ஜமாலுதீன் (வயது 18). இவர் ஆறுமுகநேரியை அடுத்த சாகுபுரம் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து, தேர்ச்சி பெற்றார். காயல்பட்டினம் மரைக்கா பள்ளி தெருவை சேர்ந்தவர் செய்யது உமர் மகன் முகதும் நயினா (17). இவரும் சாகுபுரம் பள்ளியில் பிளஸ்-1 படித்து, தேர்ச்சி பெற்றார். நண்பர்களான 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் காயல்பட்டினம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

நண்பரான சாகுபுரத்தை சேர்ந்த மாதவன் மகன் அரிகிருஷ்ணன் என்ற ஹரிஷ் மோட்டார் சைக்கிளில் நல்லூரில் இருந்து ஆறுமுகநேரிக்கு வந்து கொண்டிருந்தார். ஆறுமுகநேரி அருகே நாககன்னியாபுரம் பகுதியில் வந்தபோது அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து போனதால் இடையில் நின்றது. இதுகுறித்து அரிகிருஷ்ணன் தன்னுடைய நண்பரான அகமது ஜமாலுதீனிடம் செல்போனில் தெரிவித்தார்.

உடனே அகமது ஜமாலுதீன் தனது மோட்டார் சைக்கிளில் முகதும் நயினாவை அழைத்து கொண்டு, நாககன்னியாபுரத்துக்கு சென்றார். அங்கு பெட்ரோல் தீர்ந்துபோன அரிகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிளை, அகமது ஜமாலுதீனின் மோட்டார் சைக்கிளின் பின்னால் முகதும் நயினா அமர்ந்து தனது காலால் தள்ளியவாறு வந்தார். அவர்கள் நாககன்னியாபுரம் அருகில் உள்ள வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அகமது ஜமாலுதீனின் மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அகமது ஜமாலுதீன் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முகதும் நயினா உயிருக்கு போராடியவாறு கிடந்தார். அரிகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த முகதும் நயினாவை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் இறந்த அகமது ஜமாலுதீனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த குரும்பூர் அருகே புறையூர் ஆசாரியார் தெருவைச் சேர்ந்த நவமணி மகன் சாலமோனிடம் விசாரித்து வருகின்றனர். சாலமோன், நாலுமாவடி கிறிஸ்தவ ஊழிய நிறுவனத்தில் வாகன மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்