ஊட்டியில், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஊட்டியில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட 30 கடைகளை போலீசார் அகற்றினர்.

Update: 2019-04-22 22:45 GMT
ஊட்டி,

ஊட்டியில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது. இந்த சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க மைசூரு, பெங்களூரு, கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வாகனங்களில் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். இதனால் சேரிங்கிராசில் இருந்து லவ்டேல் சந்திப்பு, பிங்கர்போஸ்ட், தொட்டபெட்டா சந்திப்பு வரை போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

ஊட்டி நகரில் கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட சாலைகளிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் இருந்து அரசு பஸ்கள் மூலம் ஊட்டிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நடுத்தர சுற்றுலா பயணிகள் சாலை மற்றும் நடைபாதைகளில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் தங்களது கடையில் இருந்து சுமார் 1½ அடியை ஆக்கிரமித்து பொருட்களை விற்பனைக்கு வைக்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதையில், அவர்கள் நடந்த செல்ல முடியாத நிலை உள்ளது. அதன் காரணமாக அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்வதால், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா எதிரே உள்ள நடைபாதையில் கடைகள் வைக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. கடைக்கு முன்னால் கூட்டம் சேர்வதால், பெண்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஊட்டியில் அனுமதிக்கப்படாத இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பரியா, ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போக்குவரத்து போலீசார் கடந்த 2 நாட்களாக சாலை மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுவது, வாகனங்கள் நிறுத்த இடையூறு ஏற்படும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் முடிவில் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் கடைகளை தாங்களாகவே அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஊட்டி நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தாவரவியல் பூங்கா அருகே நடைபாதையில் அமைக்கப்பட்டு இருந்த 10 கடைகள், லோயர் பஜாரில் நடைபாதையில் வைத்த 20 கடைகள் என 30 கடைகள் அகற்றப்பட்டது. அப்போது போலீசாரே நகர்வு கடைகளை அப்புறப்படுத்தியதோடு, கடைகளில் இருந்த பொருட்களையும் அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமித்து கடை வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்