பந்தலூர் அருகே, மின்சாரம் இன்றி அவதிப்படும் ஓர்கடவு ஆதிவாசி மக்கள்

பந்தலூர் அருகே ஓர்கடவில் மின்சாரம் இன்றி ஆதிவாசி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2019-04-22 22:30 GMT
பந்தலூர்,

பந்தலூர் அருகே ஓர்கடவு கிராமத்தில் ஆதிவாசி மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் மிகவும் பழுதடைந்த வீடுகளில் வசித்து வந்தனர். இதனால் மழைக்காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். மேலும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் வீடுகள் காணப்பட்டது. இதனால் புதிய தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஆதிவாசி மக்களுக்கு புதிய தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. மேலும் பெரும்பாலான வீடுகளுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டது. ஆனால் அப்பணி முழுமை பெறவில்லை. இன்னும் 4 வீடுகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் ஆதிவாசி குடும்பத்தினர் இரவில் இருளில் தவிக்கின்றனர்.

மேலும் சமீபத்தில் நடந்த பள்ளி தேர்வுக்கு கூட படிக்க முடியாமல் ஆதிவாசி மாணவ- மாணவிகள் அவதிப்பட்டனர். சில மாணவிகள் தங்களது வீடுகளில் மண் எண்ணெய் விளக்கு ஏற்றி அந்த வெளிச்சத்தில் படித்தனர். இதில் போதிய வெளிச்சம் கிடைக்காததால் தொடர்ந்து படிக்க முடியாமல் தவித்தனர். இதேபோல் இக்கிராமத்துக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக வழிந்தோடுகிறது.

இதனால் கோடை காலத்தில் குடிநீர் சரிவர கிடைக்காமல் ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாய்களை சீரமைத்து முறையாக குடிநீர் வழங்க வேண்டும். மின் இணைப்பு வழங்கப்படாத வீடுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்