தஞ்சையில், பலத்த காற்று: மின்கம்பி அறுந்து விழுந்தது

தஞ்சையில் திடீரென பலத்த காற்று வீசியதால் மின்கம்பி அறுந்துவிழுந்தது.

Update: 2019-04-23 22:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பகல் நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர். அப்படியே வெளியே வந்தாலும் குடைகளை பிடித்துக் கொண்டும், சேலை, துப்பட்டா, துணியால் தலையை மூடிக் கொண்டும் தான் வருகின்றனர். பகலில் காணப்படும் வெப்பத்தின் தாக்கம் இரவிலும் எதிரொலிக்கிறது.

இதனால் மழை பெய்து வெப்பத்தின் தாக்கம் குறையுமா? என தஞ்சை மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கடந்த 2 நாட்களாக கருமேகங்கள் திரண்டு வந்தாலும் மழை பெய்யாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்றுகாலை முதல் வெயில் கொளுத்தியது. பிற்பகலில் மழை பெய்வதற்கான அறிகுறியுடன் திடீரென பலத்த காற்றுவீசியது.

இதனால் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலை பிரகதாம்பாள் நகரில் மின்கம்பி அறுந்து வீதியில் விழுந்தது. அந்த நேரத்தில் யாரும் அந்த வழியாக செல்லாததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. மின்கம்பி அறுந்து கீழே விழுந்தாலும் மின் கம்பத்துடன் ஒரு பகுதி இணைந்து இருந்ததால் தொடர்ந்து மின்சாரம் சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர், உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் பிரகதாம்பாள்நகருக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மின்வாரிய ஊழியர் ஒருவர் வந்து, அறுந்துவிழுந்த மின்கம்பியை மாற்றினார். பலத்த காற்றினால் தஞ்சை நகரில் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து கீழே விழுந்தன. தஞ்சையில் நேற்றும் மழை பெய்யாமல் மக்களை ஏமாற்றியது.

பிரகதாம்பாள் நகர், ராஜீவ்நகரில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. லோடுகளை ஏற்றி கொண்டு ஆட்டோவோ, மினிலாரியோ அந்த வழியாக சென்றால் மின்கம்பி உரசக்கூடிய அளவுக்கு தாழ்வாக செல்கிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி செல்லும் வகையில் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்