வாட்ஸ்-அப்பில் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவதாக மிரட்டல்: பயத்தில் தீக்குளித்து 10-ம் வகுப்பு மாணவி சாவு, வாலிபர் கைது

வாட்ஸ்-அப்பில் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவதாக வாலிபர் ஒருவர் மிரட்டியதால் பயத்தில் தீக்குளித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-23 23:00 GMT
ஊஞ்சலூர்,

ஊஞ்சலூர் அருகே உள்ள தேவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 22). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஊஞ்சலூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடைய தோழிகள் சிலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய செல்போனில் வைத்திருந்தார். இந்த படம் எப்படியோ நந்தகுமாருக்கு கிடைத்துள்ளது.

நந்தகுமார் அந்தப்படத்தில் மற்ற மாணவிகளின் படத்தை அழித்துவிட்டு தன்னுடைய படத்தை சேர்த்து மார்பிங் செய்துள்ளார். அதன்பின்னர் அந்த படத்தை அவர் மாணவியின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும் நந்தகுமார் சம்பந்தப்பட்ட மாணவியின் செல்போனில் தொடர்பு கொண்டு, ‘நீ என் ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லை என்றால் உன் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வாட்ஸ்-அப்பில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் பயந்துபோன மாணவி கண்ணீருடன் சென்று தனது தாயிடம் நடந்ததை கூறினார். அதைக்கேட்டு கொதித்துப்போன தாய், கடந்த 21-ந் தேதி மாலை நந்தகுமாரின் வீட்டுக்கு அதுபற்றி கேட்பதற்காக சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவி என்ன நடக்குமோ? என்று பயந்து திடீரென தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். பின்னர் உடனே வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

தீ உடல் முழுவதும் பரவியதால், கருகிய நிலையில் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாணவியின் உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை உடனடியாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று முன்தினம் அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக நந்தகுமாரை கைது செய்தனர். பின்னர் இவர் கொடுமுடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி குமாரவர்மன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.

மாணவியின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி துடித்தது பார்ப்பவரை கண்கலங்க செய்தது.

மேலும் செய்திகள்