மேற்கு தொடர்ச்சி மலையில் 4 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் 4 மணிநேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2019-04-23 22:30 GMT

உடுமலை,

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாக கொண்டு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த அணைகளுக்கு மழைக்காலங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகின்றது. அதை அடிப்படையாக கொண்டு பாசன திட்டங்கள் மற்றும் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக கோடை காலத்துக்கு முன்பாகவே மேற்கு தொடர்ச்சி மலையில் கடும் வறட்சி நிலவி வந்தது.

இதனால் ஆறுகளில் நீர் வரத்து குறைந்து விட்டது வனப்பகுதியில் உள்ள புற்கள் செடிகள் உள்ளிட்டவை வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் காய்ந்துவிட்டன. இதனால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வந்தன. அதுமட்டுமின்றி வனப்பகுதியை ஆதாரமாக கொண்டு விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்த மலைவாழ் மக்களும் கடும் இன்னல்களுக்கு ஆளானார்கள். அணைகளை ஆதாரமாக கொண்டு செயல்பட்டு வந்த பாசன திட்டங்களுக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் வினியோகம் நடைபெறாததால் விவசாயத் தொழிலில் பின்னடைவை சந்தித்தது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டன. மேலும் வெப்பத்தின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.

இந்த நிலையில் உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் நேற்று முன்தினம் இரவு 4 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வனப்பகுதி மற்றும் சமவெளிப் பகுதியில் நிலவிவந்த வெப்பத்தின் தாக்குதல் குறைந்துள்ளது. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக வனப்பகுதியில் நிலவிவந்த தீ ஏற்படும் அபாயமும் நீங்கியுள்ளது.

மலையில் கன மழை பெய்தும் அணைகளுக்கு பெரிய அளவில் நீர் வரத்து ஏற்படவில்லை. அதே போன்று திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியிலும் குறைவான அளவே தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேலும் நேற்று வனப்பகுதியில் மழை வருவதற்கான சூழல் நிலவியது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் அணைக்கு நீர்வரத்து ஏற்படுமா? என எதிர்பார்ப்பில் உள்ளனர். இனி அடுத்து தொடர்ந்து மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்