தென்காசி ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து கோடிக்கணக்கான ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

தென்காசி ஜவுளிக்கடையில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

Update: 2019-04-23 22:00 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டம் தென்காசி மவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரகுமான்கான். இவரும், நெல்லையை சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் நாகூர்மீரான் என்பவரும் தென்காசி அம்மன் சன்னதி பஜாரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்கள். பிரபலமான இந்த ஜவுளிக்கடையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு உரிமையாளர்களும், ஊழியர்களும் சென்றுவிட்டனர். நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென அந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தென்காசி தீயணைப்பு படையினர் கடைக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க தொடங்கினர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் செங்கோட்டை, கடையநல்லூர், சுரண்டை, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 5 வாகனங்கள் மூலமாக தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர்.

தீயணைப்பு பணியில் மாவட்ட தீயணைப்பு படை அலுவலர் மகாலிங்க மூர்த்தி, உதவி அலுவலர் கார்த்திகேயன், நிலைய அலுவலர்கள் விஜயன், மூக்கையா, அறிவழகன், ராஜாமணி, விஜயராகவன் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல், தாசில்தார் சண்முகம், கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீ விபத்து ஏற்பட்ட கடைக்கு எதிரே ஒரு வங்கி உள்ளது. இந்த விபத்தினால் வங்கியின் முன்புறம் அடைக்கப்பட்டு பின்புற வாசல் வழியாக நேற்று வங்கி இயங்கியது. தீ எரிந்த கடை பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன. இந்த தீ விபத்தினால் கோடிக்கணக் கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தென்காசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்