கூடலூரில் சூறைக்காற்றுடன் கனமழை, 50 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன - தோட்டக்கலைத்துறையினர் சிறைபிடிப்பு

கூடலூர் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன. இந்த நிலையில் இழப்பீடு வழங்கக்கோரி தோட்டக்கலைத்துறையினரை விவசாயிகள் சிறை பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-23 22:45 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக கடும் வறட்சி நிலவியது. இதனால் நீர்நிலைகள் வறண்டன. வனம் பசுமை இழந்ததால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதேபோல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். கோடை மழை பெய்யாததால் வறட்சியின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்தது.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக மாலை அல்லது இரவில் பரவலாக கோடை மழை பெய்தது. முதுமலை ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் கடும் சூறாவளி காற்று வீசியதால் வாழைகள் சரிந்து விழுந்தன. இதில் அப்பகுதி விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைந்து உள்ளனர்.

கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இடியுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 11 மணி முதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த பாண்டியாறு, மாயார், பொன்னானி உள்பட அனைத்து நீர்நிலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு முழுவதும் மழையுடன் காற்று வீசியதால் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. மேலும் பாண்டியாறு இரும்பு பாலம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவரது வீட்டின் மீது மரம் சரிந்து விழுந்தது.

இதேபோல் புளியாம்பாரா பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது வீட்டின் மீது மரம் சரிந்து விழுந்தது. இதில் அவரது மனைவி நிர்மலா தேவி (வயது 32) என்பவர் பலத்த காயம் அடைந்தார். ஏற்கனவே தவறி விழுந்து காயம் அடைந்த நிர்மலா தேவி வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த சமயத்தில் அவர் மீது மரம் விழுந்ததால் மீண்டும் படுகாயம் அடைந்தார்.

புளியாம்பாரா மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கரளிக்கண்டி, அத்தூர், கொல்லூர், காபிக்காடு, கொட்டக்குன்னி, கறிக்குற்றி, புளியம்வயல், மஞ்சமூலா, முன்டக்குன்னு, பாடந்துரை உள்ளிட்ட கிராமங்களில் பயிரிட்டு இருந்த வாழைகள் காற்றில் சாய்ந்து விழுந்தன. இதேபோல் தேவர்சோலை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளிலும் வாழைகள் சரிந்து விழுந்தன. இதனால் விவசாய குடும்பத்தினர் கண் கலங்கினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த 10 மாதங்களாக பராமரித்து வந்த வாழைகள் தார்களுடன் உள்ளது. சில மாதங்களாக கடும் வறட்சி நிலவிய போதிலும் இரவு பகலாக பாதுகாத்து வளர்க்கப்பட்டது. இன்னும் 1 மாதம் கழித்து இருந்தால் நன்கு விளைந்த தார்களை அறுவடை செய்து இருக்கலாம்.

அதற்குள் பலத்த காற்று வீசி வாழைகள் முறிந்து விழுந்து விட்டன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்துள்ளது. இதற்காக வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்துவது என தெரியவில்லை. தொடர்ந்து விவசாயத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூடலூர் பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்தது குறித்து தகவல் அறிந்த தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் ஆனந்த் தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பலத்த காற்றில் நாசமான வாழைகள் குறித்து கணக்கெடுத்தனர். அப்போது அவர்களிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது பெரிய அளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் உயர் அதிகாரிகள் யாரும் இப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்யவில்லை என கூறி தோட்டக்கலைத்துறையினரை புளியாம்பாரா விவசாயிகள் சிறை பிடித்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ. நேரில் வந்து பார்வையிட்டு இழப்பீடு தொகை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி, தேவர்சோலை வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் நூர்ஜகான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேதம் அடைந்த வாழைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு முழுவிவரங்களும் சேகரித்த பின்னர் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து சிறை வைக்கப்பட்ட தோட்டக்கலைத்துறையினரை விவசாயிகள் விடுவித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி பாலகிருஷ்ணன் கூறியதாவது:- நகைகளை வங்கியில் அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தை கொண்டு 500 நேந்திரன் வாழைகள் நடவு செய்து 10 மாதங்களாக பராமரித்து வந்தேன். கோடை வறட்சியிலும் இரவு பகலாக தோட்டத்தில் தங்கி உரம், நீர்பாய்ச்சினேன். இந்தநிலையில் குலைதள்ளிய தார்களுடன் நின்றிருந்த வாழைகள் ஒரேநாள் இரவில் சரிந்து விழுந்து விட்டன. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வங்கியில் கடனை அடைத்து நகைகளை மீட்பது எப்படி என தெரியவில்லை. கடந்த ஆண்டு கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டதால் ஓணம் பண்டிகை கொண்டாடவில்லை. இதனால் நேந்திரன் வாழைக்காய்கள் விலை அடியோடு சரிந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பு ஏற்படுகிறது. அரசு மூலம் இழப்பீடு தொகை கிடைப்பது இல்லை. இவ்வாறு அவர் கவலையுடன் கூறினார்.

விவசாயி உதயக்குமார் கூறியதாவது:- எனது தோட்டத்தில் 2 ஆயிரம் வாழைகள் பயிரிட்டு பராமரிக்கப்பட்டது. இவற்றில் ஆயிரம் வாழைகளுக்கு மேல் காற்றில் முறிந்து விழுந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் பயிர்காப்பீடு செய்தும் சேதம் அடைந்த பயிர்களுக்கு இதுவரை எந்த தொகையும் திருப்பி தரவில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்யவில்லை. வருவாய், தோட்டக்கலைத்துறையினர் கணக்கெடுக்கும் பணி மட்டுமே செய்கின்றனர். அரசு மூலம் இழப்பீடு தொகை வழங்குவது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு 200 வாழைகள் பாதிக்கப்பட்டது. அதற்கு ரூ.900 மட்டுமே அரசு மூலம் இழப்பீடு வழங்கப்பட்டது. அந்த தொகையை வைத்து இழப்பீட்டை ஈடு செய்ய முடியுமா? என்பதே எனது கேள்வி. விவசாயிகள் நலனில் அரசும், அதிகாரிகளும் அக்கறை செலுத்துவது இல்லை. கூடலூர் பகுதியில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்துள்ளது. ஆனால் அதிகாரிகள் அதை பற்றி கண்டு கொள்வது இல்லை. எந்த ஆண்டிலும் முழுமையான வருவாயை விவசாயிகளால் ஈட்ட முடியவில்லை. இவ்வாறு அவர் ஆதங்கத்துடன் கூறினார்.

கூடலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான வாழைகள் காற்றில் சரிந்த சம்பவம் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே அரசு துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து முழுமையாக கணக்கெடுத்து அவர்களுக்கு நியாயமான இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பந்தலூர் தாலுகா பகுதியிலும் பந்தலூர், உப்பட்டி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, முள்ளன்வயல் உள்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் எருமாடு கூலால், மண்ணாத்திவயல், பள்ளிசந்திப்பு ஆகிய பகுதியில் மரங்கள் விழுந்து வீடுகள் சேதம் அடைந்தன. கக்குண்டி பகுதியில் ரவீந்திரகுமார், காளிமுத்து, சசி, பாபு, பிஜூ ஆகியோரது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த வாழைகள் முறிந்து விழுந்தன.

இதேபோல் நெல்லியாளம் டேன்டீ, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, அம்பலமூலா, முள்ளன்வயல் பகுதியில் கடந்த 4 நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, எருமாடு வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் யுவராஜ், ஸ்ரீஜா, உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேதம் அடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்