கோவில்பட்டியில் அரசு பஸ் டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்தம் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோவில்பட்டியில் அரசு பஸ் டிரைவர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால் சுமார் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-04-23 21:30 GMT
கோவில்பட்டி, 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வன்னிமடையைச் சேர்ந்தவர் சொரூபராஜ் (வயது 40). இவர் சாத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

கோவில்பட்டி அருகே வெள்ளாளங்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் கிருஷ்ணசாமி (35). இவர் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவர்கள் 2 பேரும் நேற்று காலை 8.15 மணி அளவில், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பஸ்களை இயக்குவதற்கு தயாராக இருந்தனர். அப்போது எந்த பஸ்சை முதலில் ஓட்டி செல்வது என்பது தொடர்பாக, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இதுகுறித்து சொரூபராஜ் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனே போலீசார் விரைந்து சென்று, கிருஷ்ணசாமியை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது கிருஷ்ணசாமியை போலீசார் தாக்கியதாக தகவல் பரவியது.

இதையடுத்து கோவில்பட்டி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் அனைத்து அரசு பஸ்களையும் குறுக்கும் நெடுக்குமாக டிரைவர்கள் நிறுத்தி, திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எந்த பஸ்சும் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல முடியவில்லை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதுடன், பஸ் வசதியின்றி பயணிகள் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன் (மேற்கு), சுதேசன் (கிழக்கு), அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர்கள் ரமேசன் (கோவில்பட்டி), சுப்பிரமணியன் (சாத்தூர்) மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, இரு தரப்பு டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அண்ணா பஸ் நிலையத்தில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்பட்ட பஸ்களை போலீசாரே இயக்கி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். தொடர்ந்து தனியார் பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்பட்டன.

தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து காலை 11.45 மணி அளவில் அரசு பஸ் டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர். இதனால் சுமார் 3½ மணி நேரம் அரசு பஸ்கள் இயக்கப்படாததால், பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்