சவுமஹலா அரண்மனை

விண்டேஜ் கார்கள் பலவும் இங்கே பார்வையாளர்கள் பார்த்து மகிழ காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2019-04-24 06:48 GMT
18-ம் நூற்றாண்டில் ஐதராபாத் நகரில் ஐந்தாவது நிஜாம் அட்சர் உத்தவுலா காலத்தில் கட்டப்பட்டது சவுமஹலா அரண்மனை. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அரண்மனை, நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். ‘சவு’ என்கிற வார்த்தைக்கு அரேபிய மொழியில் நான்கு என்றும் ‘மஹலத்’ என்றால் அரண்மனை என்றும் பொருள்படும். நான்கு அரண்மனைகளை உள்ளடக்கியது என்பதால் இந்த பெயர் பெற்றது.

முன்புறம் அருமையான பச்சை புல்வெளிகள், கண்களுக்கு விருந்தாகின்றன. முகப்பில் ஒரு மிக பிரமாண்டமான பவுண்டைன் இருக்கிறது.இதன் சுற்று அமைப்புகளில் பிரமாதமான வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் இருக்கின்றன.

நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய மிகப்பெரிய தர்பார் ஹால் நிச்சயம் நம்மை மெய்மறக்க வைக்கும். ஒவ்வொரு தளத்திலும் இருக்கும் பலவிதமான கண்ணாடி விளக்குகளை பார்க்க ஒரு நாள் போதாது. நிஜாம் காலத்து நாணயங்கள், மன்னர் குடும்பத்தினர் பயன்படுத்திய உடைகள் மற்றும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இது ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருக்கும் ஷா அரண்மைனையின் தோற்றத்தை போலிருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி விண்டேஜ் கார்கள் பலவும் இங்கே பார்வையாளர்கள் பார்த்து மகிழ காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அரண்மனைக்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு தலா ஐம்பது ரூபாயும், குழந்தைகளுக்கு தலா பத்து ரூபாயும் வசூலிக்கபடுகிறது.

மேலும் செய்திகள்