காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-24 23:00 GMT

அரக்கோணம், 

அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட இச்சிப்புத்தூர் காலனி பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் அரக்கோணம்– திருத்தணி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் நாங்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் நடந்து சென்று விவசாய நிலத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் எங்கள் பகுதிகளில் குடிநீர் தங்கு, தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து தாசில்தார் ஜெயகுமார் கூறுகையில், இச்சிப்புத்தூர் காலனிக்கு குடிநீர் வழங்கி வரும் பகுதியில் குழாய் பழுதடைந்து உள்ளது. அதை சரிசெய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டவுடன் குடிநீர் தங்கு தடையில்லாமல் கிடைக்கும் என்றார்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரக்கோணம்– திருத்தணி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்