குடவாசல் அருகே விவசாயி அடித்துக்கொலை தந்தை-மகன் கைது

குடவாசல் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-24 22:15 GMT
குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பருத்தியூர் பள்ளிகூட தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 45). விவசாயி. இவரது வீட்டின் எதிரே அ.தி.மு.க. கொடி மேடை இருந்தது. அதனை தேர்தல் நேரத்தில் அரசு அதிகாரிகள் இடித்து விட்டனர்.

இடிக்கப்பட்ட தூண்களில் உள்ள கற்களை அதே தெருவை சேர்ந்த ராஜப்பா(40), அவரது மனைவி வளர்மதி ஆகிய இருவரும் எடுத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த குமார், கொடிமேடை கற்களை யார் அள்ளி சென்றது? என தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

இதனை கேட்ட ராஜப்பா, நான்தான் அந்த கொடி மேடையில் இருந்த கற்களை எடுத்து சென்றேன் என்று குமாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜப்பா, வீட்டின் அருகே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து குமாரை தாக்க முயன்றுள்ளார். இந்த சம்பவத்தின்போது அங்கு இருந்த ஒரு பெண், அதனை தடுத்து விட்டார்.

ஆனாலும் ஆத்திரம் அடங்காத ராஜப்பா, அருகில் கிடந்த கட்டையை அடுத்து குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே ராஜப்பா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள், மயங்கிய நிலையில் கிடந்த குமாரை ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்களிடம் தனது மகன் கட்டையால் குமாரை அடித்ததை மறைத்த ராமச்சந்திரன், மோட்டார் சைக்கிளில் சென்றபோது குமார் தவறி விழுந்ததாக கூறியுள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குமாரின் மனைவி வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராஜப்பா, ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்