படகில் கள்ளத்தனமாக, கோடியக்கரை வந்த இலங்கை தமிழர், பட்டுக்கோட்டையில் பிடிபட்டார் போலீசார் விசாரணை

படகில் கள்ளத்தனமாக கோடியக்கரை வந்த இலங்கை தமிழர், பட்டுக்கோட்டையில் பிடிபட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-04-24 22:15 GMT
வேதாரண்யம்,

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்கள், ஓட்டல்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்தியர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த இந்த கொடூர சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.

இலங்கையில் நடந்த துயர சம்பவத்துக்கான சதி வேலைகளில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க அந்த நாட்டு ராணுவம் முனைப்பு காட்டி வருகிறது.

இலங்கையில் இருந்து கடல் வழியாக தங்கம், போதை பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குண்டு வெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதிகள் யாரேனும் கடல் மார்க்கமாக தமிழகத்தில் ஊடுருவி உள்ளனரா? என்பதை கடலோர காவல் குழும போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தீவிரவாதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க நுண்ணறிவு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று நாகை மாவட்டம் முழுவதும் கடலோர பகுதிகளில் தமிழக கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டி.ஜி.பி. வன்னியபெருமாள் தலைமையில் தீவிர கண்காணிப்பு பணி நடந்தது.

இதையொட்டி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் இலங்கை தலைமன்னார் கோசாலை பகுதியை சேர்ந்த ரஞ்சித் செபாஸ்டின்(வயது 30) என்பதும், அவர் இலங்கை தமிழர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்தது.

அவர், இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு கடந்த 19-ந் தேதி நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு வந்து சேர்ந்தது தெரிய வந்தது. அவரிடம் ஏன் தமிழகம் வந்தீர்கள்? என போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மார்த்தாண்டத்தில் வசித்து வரும் சகோதரியை சந்திக்க வந்ததாக கூறினார். ஆனாலும் அதை நம்பாத போலீசார், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த ஒருவரை மேரீஸ் கார்னர் அருகே உள்ள தங்கும் விடுதியில் வைத்து ரஞ்சித் செபாஸ்டின் சந்தித்து பேசியதும், தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக இருவரிடமும் ‘கியூ’ பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கடலோர பகுதியில் படகு எதுவும் கரை ஒதுங்கி உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ரஞ்சித் செபாஸ்டின் தமிழகம் வந்ததற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும் என்று கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்