தமிழ்ப்பல்கலைக்கழக நூல்களை மறுபதிப்பு செய்ய தமிழக அரசு ரூ.8 கோடி ஒதுக்கீடு துணைவேந்தர் தகவல்

தமிழ்ப்பல்கலைக்கழக நூல்களை மறுபதிப்பு செய்ய தமிழக அரசு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

Update: 2019-04-24 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கீழராஜவீதி அரண்மனை வளாகத்தில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழக பதிப்புத்துறையில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி 50 சதவீத தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடக்கவிழா நேற்று காலை நடந்தது. நூல்கள் விற்பனையை பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசிய தாவது:-

உலக தமிழர்களுக்கு இலக்கிய வேடந்தாங்கலாக தமிழ்ப்பல்கலைக்கழகம் திகழ்கிறது. பிற பல்கலைக்கழகங்களுக்கு இல்லாத சிறப்பு தமிழ்மொழியின் பன்முக தன்மைகளை வெளிப்படுத்தும் நோக்கில் பதிப்புத்துறை மற்றும் அச்சகம் தொடங்கப்பட்டுள்து. இதுவரை பதிப்புத்துறையின் மூலம் 452 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் விற்பனைக்காக தற்போது இருப்பில் உள்ளவை 250 நூல்கள் ஆகும்.

தமிழ்ப்பல்கலைக்கழக பதிப்புத்துறை வெளியீடுகளை மறுபதிப்பு செய்வதற்காக தமிழக அரசு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக ரூ.2 கோடி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 225 நூல்களை மறுபதிப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 452 நூல்களும் மறுபதிப்பு செய்யப்படும். புதிய நூல்களும் வெளியிட முயற்சி செய்யப்படும்.

பல்கலைக்கழக மானியக்குழு நிதி மூலம் ரூ.13 லட்சத்தில் புதிய நூல்கள் அச்சிடும் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. 20 புதிய நூல்கள் அச்சிடப்பட உள்ளன. 50 சதவீத தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை அடுத்த மாதம்(மே) 8-ந் தேதி வரை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் உலக திருக்குறள் பேரவை செயலாளர் பழ.மாறவர்மன், பல்கலைக்கழக பதிவாளர் முத்துக்குமார், பதிப்புத்துறை இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்