புதுவையில் தடைக்காலம் அமல்: வரத்துக்குறைவால் மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு

தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வரத்து குறைந்து மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-04-24 22:30 GMT
புதுச்சேரி,

புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் உள்பட மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் நேரடியாக ஈடுபட்டு வருகிறார்கள். மறைமுகமாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த தொழிலில் உள்ளனர். புதுவை மாவட்டத்தில் காலாப்பட்டு, வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், நரம்பை, பனித்திட்டு, குருசுகுப்பம் என 18 மீனவ கிராமங்கள் உள்ளன. காரைக்கால் மாவட்டம் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரை 11 மீனவ கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரம் பைபர் படகுகள், ஆயிரம் நாட்டு படகுகள், 100-க்கும் மேற்பட்ட பாய்மர படகுகள் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை 60 நாட்கள் ஆண்டு தோறும் மீன்பிடி தடை காலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அந்த வகையில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.

இதனால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால் 20 குதிரை திறனுக்கு குறைவான பைபர் படகுகளில் சென்று கடலில் மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். ஆனால் வழக்கத்தை விட குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைக்கிறது. இதனால் புதுவை மக்களுக்கு போதுமான அளவுக்கு மீன்கள் கிடைக்காத நிலை இருந்து வருகிறது.

விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து வரும்போதே புதுவை மக்களுக்கு போதுமான அளவுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் அருகில் உள்ள கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்து மீன்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் மேலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கருவாடுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மேலும் கேரளாவில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு புதுவை மார்க்கெட்டுகளில் விற்கப்பட்டு வருகின்றன. இவை அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், குறிப்பிட்ட வகை மீன்களே கிடைப்பதாகவும் மீன் பிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

தடைக்காலம் அமலில் இருந்து வரும் நிலையில் பழுதான படகுகளை சரி செய்து வர்ணம் பூசுவது, சேதமடைந்த வலைகளை சரிசெய்வது போன்ற பணிகளில் மீனவர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். தடைக்காலத்தின்போது புதுச்சேரியில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரண தொகையாக தலா ரூ.5,500 வழங்கப்படும். விசைப்படகுகளை சீரமைக்க ரூ.20 ஆயிரம், பைபர் படகுகளை சீரமைக்க ரூ.10 ஆயிரம் என தனியாக உதவித்தொகை வழங்கப்படும். இதை உடனடியாக தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்