காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவியை மிரட்டிய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவியை மிரட்டிய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-04-24 22:15 GMT
திருச்சி,

திருச்சி விமானநிலையம் அருகே திலகர்தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருடைய மகன் அஜித்குமார்(வயது 21). கூலித்தொழிலாளியான இவர் திருச்சியை சேர்ந்த 17 வயது கல்லுரி மாணவி ஒருவரிடம், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர், மாணவியிடம் நட்பாக இருக்கலாம் என கேட்டுள்ளார். இதனால் மாணவியும் அவருடன் நட்பாக பழகி வந்தார். ஒருகட்டத்தில் அஜித்குமார், மாணவியின் புகைப்படத்தை தன்னுடைய புகைப்படத்துடன் இணைத்து வாட்ஸ்அப் மூலம் மாணவிக்கு அனுப்பினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி அவரிடம் இது பற்றி கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னை காதலிக்காவிட்டால் உனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு விடுவேன் என மிரட்டிள்ளார்.

இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். உடனடியாக அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் பொன்மலை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் அஜித்குமாரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் மாவட்ட அரசு கூடுதல் வக்கீல் ஆர்.வெங்கடேசன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்