கறம்பக்குடி பகுதியில் ஏரி, குளங்கள் வறண்டன; தண்ணீர் இன்றி கால்நடைகள், பறவைகள் தவிப்பு

கறம்பக்குடி பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் ஏரி, குளங்கள் வறண்டன. தண்ணீர் இன்றி கால்நடைகள், பறவைகள் தவித்து வருகின்றன.

Update: 2019-04-24 22:45 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா பகுதி வானம் பார்த்த பூமியாகும். மழையால் கிடைக்கும் தண்ணீரை கொண்டே ஏரி, குளங்கள் மூலமும், ஆழ்குழாய் கிணற்று பாசனத்தால் அப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கறம்பக்குடி பகுதியில் போதிய மழை பெய்யாததால் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து உள்ளது. கஜா புயலின் போது கூட இப்பகுதியில் போதிய மழை இல்லை.

கறம்பக்குடி தாலுகாவில் 120 ஏரி, 250 பாசன குளங்கள், 400-க்கும் மேற்பட்ட குட்டைகள் உள்ளன. சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இன்றி ஏரி, குளங்கள் வறண்டு விட்டன. வழக்கமாக தண்ணீர் அருந்தும் குளம், குட்டைகளில் தற்போது தண்ணீர் இல்லாமல் இருப்பதால் கால்நடைகளும், பறவைகளும் தவித்து வருகின்றன. மாடு, ஆடு, கோழி, வாத்து போன்றவற்றை வளர்ப்போர் தண்ணீரை பாத்திரங்களில் வைத்து கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

கோரிக்கை

நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டதால் கறம்பக்குடி தாலுகா பகுதியில் 60 சதவீதம் சிறு விசை நீர்த்தேக்க தொட்டிகள் செயல்படாமல் உள்ளன. இதனால் குடிநீர் இன்றியும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அனைத்து குளங்களிலும் தண்ணீர் வற்றி விட்டதால் சலவை தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். தண்ணீர் இன்றி விவசாய பம்பு செட்டுகள் செயல்படாததால் விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கறம்பக்குடியில் நிலவும் கடும் வறட்சியை போக்கவும், விவசாயம், கால்நடைகளை காக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்