அறந்தாங்கி அருகே குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

அறந்தாங்கி அருகே குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2019-04-24 22:30 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வைரி வயல் ஸ்ரீ வீரமுனியாண்டவர் கோவில் சந்தனகாப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் சென்னை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 40 மாட்டு வண்டிகளும், 107 குதிரை வண்டிகளும் கலந்து கொண் டன. நான்கு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

பரிசு

இதில் பெரிய மாடு பிரிவில் கே.புதுப்பட்டி அம்பாள் சுந்தரரேசர் மாட்டு வண்டி முதல் இடத்தையும், மதுரை அவனியாபுரம் மணி மாட்டு வண்டி 2-வது இடத்தையும், கருப்பூர் வீரையா மாட்டு வண்டி 3-வது இடத்தையும் பிடித்தது. கரிசான் மாடு பிரிவில் இடையன்காடு கலந்தர்மயிதீன் மாட்டு வண்டி முதல் இடத்தையும், பொய்கைவயல் மாறன் மாட்டுவண்டி 2-வது இடத்தையும், கொத்தமங்கலம் மாட்டு வண்டி 3-வது இடத்தையும், திருவப்பாடி பெரியசாமி மாட்டுவண்டி 4-வது இடத்தையும் பிடித்தது. குதிரை வண்டி பந்தயத்தில் கரூர் குதிரை வண்டி முதல் இடத்தையும், திருச்சி குதிரைவண்டிகள் 2, 3-வது இடத்தையும், கோயம்புத்தூர் குதிரை வண்டி 4-வது இடத்தையும் பிடித்தது. பந்தயத்தில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

கண்டுகளித்தனர்

மேலும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு, சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டது. மேலும் பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து மாட்டு, குதிரை வண்டிகளுக்கு குத்துவிளக்கு, வேட்டி, துண்டுகள் விழா கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது. பந்தயத்தை ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து கண்டு களித்தனர். அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்