மேலூர் நான்கு வழிச்சாலையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி– கல் வீச்சு

குறிப்பிட்ட சமுதாயம் குறித்து அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரி மேலூர் நான்கு வழிச்சாலையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-24 22:15 GMT

மேலூர்,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் குறிப்பிட்ட சமுதாயம் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் பரப்பிய நபர்களை கைது செய்யக்கோரி தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கொட்டாம்பட்டியில் 4 நாட்கள் தொடர்ச்சியாக மறியல் நடைபெற்றது.

இந்தநிலையில் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அந்த சமுதாய பொதுமக்கள் 500–க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் திரண்டு வந்தனர். அவர்கள் மேலூரில் உள்ள மதுரை–சென்னை நான்கு வழிச்சாலையில் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதற்கிடையே மறியல் குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா, மேலூர் தாசில்தார் சிவகாமிநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவதூறு பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டதால் மறியலை கைவிடுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அவதூறு பரப்பியதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக சாலையில் காத்திருந்த வாகனங்கள் அருகில் உள்ள சூரக்குண்டு, கல்லம்பட்டி, அரிட்டாபட்டி கிராமங்கள் வழியாக செல்ல முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது. பின்னர் தென் மாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்கள் அழகர்கோவில் மற்றும் திருவாதவூர் வழியாக போலீசார் திருப்பிவிட்டனர்.

அப்போது சில வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றது. போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் போராட்டம் தொடரவே பொதுமக்கள் மீது போலீசார் மீது தடியடி நடத்தினர். இதனால் நான்கு வழிச்சாலையில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. போராட்டக்காரர்களும், போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. கல்வீச்சில் மேலூர் போலீஸ் நிலைய ஏட்டு தர்மலிங்கம் காயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் சம்பவம் குறித்து அறிந்த மதுரை சரக டி.ஐ.ஜி பிரதீப்குமார், மதுரை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து மீண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைந்துபோக செய்தனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டு இடையூறு செய்தது, போலீசார் மீது தாக்கியது என பல்வேறு காரணங்களுக்காக 100–க்கும் மேற்பட்டோர் மீது மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்