பாலின மாற்று அறுவை சிகிச்சையை தடை செய்ய அரசாணை பிறப்பிக்க வேண்டும்; சுகாதாரத்துறை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பாலின மாற்று அறுவை சிகிச்சையை தடை செய்ய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-24 22:30 GMT
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜாவை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக கடந்த 31.10.2018 அன்று தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலுக்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க கோவில் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இருந்தபோதும், அவர்கள் அந்த கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் தங்களது திருமணத்தை இந்து திருமணச் சட்டப்படி பதிவு செய்ய தூத்துக்குடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். இந்து மதத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்தால் மட்டுமே இந்து திருமணச் சட்டப்படி பதிவு செய்ய முடியும். திருநங்கையும், ஆணும் செய்து கொண்ட திருமணத்தை பதிவு செய்ய முடியாது என சார்- பதிவாளர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து தங்களின் திருமணத்தை இந்து திருமணச் சட்டப்படி பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

திருநங்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவர் என்ற அந்தஸ்தை வழங்கி இருக்கிறது. வெளிப்படையான தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அன்பையும் பார்க்க வேண்டும். திருநங்கைகள் சட்டம் வழங்கும் உரிமைகளை மறுக்க முடியாது. திருநங்கைகள் ஆணாகவோ, பெண்ணாகவோ வாழ உரிமை உள்ளது. பாலின மாறுபாடுகளால் திருநங்கைகள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். இதுசம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் இருபால் தன்மையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இது தவறு.

இதனால் இருபால் தன்மையுடன் பிறக்கும் குழந்தைகள், சிறுவர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரர்களின் திருமணத்தை பதிவு செய்ய மறுத்து பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அவர்களின் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கலப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கான சலுகைகளை பெற மனுதாரர்களுக்கு தகுதியுள்ளது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்