சீசன் காலத்தில் தொடரும் சிரமம், கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுமா?

கொடைக்கானலில் சீசன் காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் புதிதாக சாலைகள் அமைக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Update: 2019-04-24 22:45 GMT
கொடைக்கானல்,

கோடைகாலத்தில் குளுகுளு சீசனை அனுபவிக்க தினமும் ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். இதற்காக வத்தலக்குண்டு, பழனி ஆகிய 2 ஊர்களில் இருந்தும் கொடைக்கானலுக்கு சாலை வசதி உள்ளது. இந்த 2 சாலைகளும் பெருமாள்மலையில் சேர்ந்து பின்னர் ஒரே சாலையாக கொடைக்கானலுக்கு வருகிறது.

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக கொடைக்கானலுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சாதாரண நாட்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும், விடுமுறை நாட்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் கொடைக்கானலுக்கு வருகின்றன. அதிலும் சீசன் காலத்தில் 5 ஆயிரம் வாகனங்கள் வரை வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து வாகனங்களும் பெருமாள்மலைக்கு பின்னர் ஒரே சாலையில் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சுற்றுலா தலங்களை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். உள்ளூர் மக்கள் பிற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசலை தடுக்க புதிதாக சாலைகளை அமைக்கவேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதன்படி பழனி-கொடைக்கானல் இடையே வில்பட்டி, பள்ளங்கி, பேத்துப்பாறை வழியாக சாலை அமைக்க வேண்டும். அதேபோல் மன்னவனூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மலைப்பாதை பயன்படுத்தப்பட்டது. அந்த பாதையை புதுப்பித்து சாலையாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

இதுதவிர பெருமாள்மலை, அடுக்கம், கும்பக்கரை அருவி வரை சாலை அமைக்கும் பணி கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் போக்குவரத்து தொடங்கப்படாத நிலை உள்ளது. எனவே, அந்த சாலை பணியை துரிதப்படுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் முக்கிய சுற்றுலா இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி இல்லை. பெரும்பாலான சுற்றுலா இடங்களில் சாலையோர கடைகள் புதிதாக முளைத்துள்ளன. இதனால் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகி விடுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். அதோடு பஸ்நிலைய பகுதியில் பல ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அந்த இடத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். இதன்மூலம் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்.

இதுதவிர ஏரி சாலையை அகலப்படுத்த வேண்டும். எனவே, கொடைக்கானலில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண புதிய சாலைகள், ஆக்கிரமிப்பு அகற்றம், வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகியவை அமைக்க வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதற்கிடையே நெடுஞ்சாலை துறையின் சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. குளுகுளு சீசன் தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் நடைபெறும் சாலை பராமரிப்பால் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அந்த பணியை 2 மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்