ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே 6-ந் தேதி கடைசி நாள் - ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் வினியோகம்

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே 6-ந் தேதி கடைசி நாள் ஆகும். இதுவரை ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-04-24 23:00 GMT
ஊட்டி,

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, பாதுகாப்பியல், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, பி.காம்., பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வனவிலங்கு உயிரியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் உள்பட மொத்தம் 17 பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த கல்லூரியில் இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் இளம் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு 2019-2020-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 10-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆகும். பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மாணவ-மாணவிகள் தங்களது சாதி சான்றிதழ் அசலை காண்பித்து, அதன் நகலை சமர்ப்பித்து விண்ணப்பத்தை கட்டணம் இன்றி பெற்றுக்கொள்ளலாம். கடந்த 19-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகிறார்கள்.

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் நேற்று நீண்ட வரிசையில் காத்து நின்று விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். மாணவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். கல்லூரியில் விண்ணப்பம் பெற மற்றும் சமர்ப்பிக்க வருகிற மே மாதம் 6-ந் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். மே 8-ந் தேதி அல்லது 9-ந் தேதி மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அதுகுறித்த விவரங்கள் கல்லூரியில் ஒட்டப்பட உள்ளது. மேலும் மாணவர்கள் விண்ணப்பத்தில் அளித்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

அதனை தொடர்ந்து 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 13-ந் தேதி மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் போன்ற சிறப்பு பிரிவினருக்கு காலை 10 மணிக்கு கலந்தாய்வு நடக்கிறது. இதையடுத்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், நடத்தை சான்றிதழ், சாதி சான்றிதழ், 5 புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலை எடுத்து வர வேண்டும்.

மாணவர் சேர்க்கை அன்று மாணவர்களுக்கு அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கப்பட உள்ளது. இதற்கு மாணவர்கள் குறைந்தபட்சம் வைப்புத்தொகையாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை வாங்க வரும் மாணவர்களுக்கு உதவுவதற்காக வழிகாட்டுதல் மையம் அமைக்கப்பட்டு, அங்கு 2 பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் விண்ணப்பம் வாங்குவது, எவ்வாறு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது குறித்து எடுத்து கூறுவார்கள். தற்போது இதுவரை ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார். 

மேலும் செய்திகள்