திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 5,457 தபால் ஓட்டுகள் பதிவு கலெக்டர் சிவராசு தகவல்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 5,457 தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

Update: 2019-04-24 23:00 GMT
திருச்சி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி நடந்தது. தபால் ஓட்டுகள் உள்ளவர்கள் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். திருச்சி தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகள் தொடர்பாக அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் விளக்க கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் சிவராசு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த 199 ராணுவ வீரர்கள், 527 ஆசிரியர்கள் என மொத்தம் 726 பேரின் தபால் ஓட்டுகள் வந்துள்ளன. இதுதவிர ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்ட போது, அவர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டது.

இந்த தபால் ஓட்டுகள் பதிவு செய்வதற்காக மணப்பாறை லெட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 458 தபால் ஓட்டுகளும், ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 187 தபால் ஓட்டுகளும், திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 287 தபால் ஓட்டுகளும், திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மையத்தில் 189 தபால் ஓட்டுகளும் பதிவானது.

இதேபோல திருவெறும்பூர் மான்போர்ட் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 135 தபால் ஓட்டுகளும், லால்குடி மெஸ்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 430 தபால் ஓட்டுகளும், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 326 தபால் ஓட்டுகளும், தொட்டியம் ஏழுர்பட்டி, கொங்குநாடு பொறியியல் கல்லூரி மையத்தில் 280 தபால் ஓட்டுகளும், துறையூர் சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 283 தபால் ஓட்டுகளும், திருச்சி கலையரங்க மையத்தில் போலீஸ் துறை மூலமாக 1,622 தபால் ஓட்டுகளும், புதுக்கோட்டை ராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 362 தபால் ஓட்டுகளும், புதுக்கோட்டை அரியூர் குமரன் தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் 29 தபால் ஓட்டுகளும் வரப்பெற்றுள்ளது.

மேலும் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 71 தபால் ஓட்டுகளும், இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 25 தபால் ஓட்டுகளும், புதுப்பட்டி அரசு தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் 47 தபால் ஓட்டுகளும் என மொத்தம் 12 மையங்களில் வைக்கப்பட்டுள்ள தபால் ஓட்டுகள் 4,731 தபால் ஓட்டுகள் வந்துள்ளது. திருச்சி தொகுதியில் மொத்தம் 5,457 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் மொத்தம் 12 ஆயிரம் பேருக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டதில் இதுவரை 9,528 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தேர்தல் தனி தாசில்தார் முத்துசாமி, பேரிடர் மேலாண்மை தாசில்தார் ஜவகர் மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்