நங்கவள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

நங்கவள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-24 21:45 GMT
மேச்சேரி, 

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள சூரப்பள்ளி ஊராட்சி குப்பம்பட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவதியடைந்து வந்த பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டு நங்கவள்ளி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர்.

அப்போது அவர்கள் திடீரென நங்கவள்ளி பஸ் நிலையத்தில் தரையில் அமர்ந்து குடிநீர் கேட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 10 நிமிடங்கள் இந்த சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதையறிந்த நங்கவள்ளி போலீசார் அங்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்களை ஒன்றிய அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துச்சென்றனர்.

அப்போது பொதுமக்களிடம் ஒன்றிய ஆணையாளர் அசோக்ராஜன், ஆணையாளர் (கிராம ஊராட்சி) சத்திய விஜயன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். குடிநீர் பிரச்சினையை தீர்க்க அந்த பகுதிக்கு தனியாக பைப்லைன் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

முன்னதாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் காலிக்குடங்களை கொண்டு வந்தனர். மேலும் சமையல் செய்து போராட்டம் நடத்த பொருட்களையும், பாத்திரங்களையும் கொண்டு வந்தனர். ஆனால் அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் சமையல் செய்யும் போராட்டத்தை நடத்தவில்லை. இந்த சாலைமறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்