என்ஜின் பழுதடைந்ததால் நடுக்கடலில் படகில் தத்தளித்த மீனவர்கள் பாய்மரத்தை கட்டி கரைக்கு திரும்பினர்

ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு என்ஜின் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்தனர். இதை தொடர்ந்து படகில் பாய்மரத்தை கட்டி மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.

Update: 2019-04-25 22:45 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையில் இருந்து நேற்று முன்தினம் பாரதிதாசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் பாரதிதாசன் மற்றும் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த கபிலன், வேதமூர்த்தி, திருமுருகன், ராமேஸ்வரத்தை சேர்ந்த கர்ணா ஆகிய 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்த மீனவர்கள் நேற்று மதியம் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் மற்ற மீனவர்கள் ஒரு படகில் சென்று 5 மீனவர் களையும் தேடினர்.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்திலும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்களின் உறவினர்கள் சோகத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது படகு என்ஜின் பழுதடைந்துள்ளது. இதனால் மீனவர்கள் 5 பேரும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து படகில் பாய்மரத்தை கட்டி நேற்று இரவு 9 மணி அளவில் 5 மீனவர்களும் கரைக்கு திரும்பினர். அதன்பின்னரே மீனவர்களின் குடும்பத்தினரும், மீனவ கிராம மக்களும் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்