ரெயில்வேயில் தமிழர்களுக்கு வேலை வழங்கக்கோரி 3-ந் தேதி மறியல் தமிழ்த்தேசிய பேரியக்க தலைவர் பேட்டி

ரெயில்வேயில் தமிழர்களுக்கு வேலை வழங்கக்கோரி திருச்சி பொன்மலை பணிமனை முன்பு 3-ந் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்த்தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் கூறினார்.

Update: 2019-04-25 23:00 GMT
திருச்சி,

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் தொழிற்சாலைகள், ரெயில்வேதுறை, தபால்துறை, வருமானவரித்துறை, விமானநிலையங்கள் உள்பட 18 துறைகளில் தமிழக இளைஞர்களை புறக்கணித்து வடமாநிலங்கள் மற்றும் இதர வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை 100-க்கு 90 சதவீதம் அளவுக்கு வேலைக்கு சேர்க்கிறார்கள். சமீபத்தில் திருச்சி பொன்மலை ரெயில்வேயில் பழகுனர் பணிக்கு நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 1,765 பேரில் 100 பேர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 1,600 பேர் வடமாநிலங்களையும், இதர வெளிமாநிலங்களையும் சேர்ந்தவர்கள்.

மொழி வழி மாநிலம் அமைக்கப்பட்டதற்கான நோக்கம் அந்த மாநிலம் மொழி, பண்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வளர்ச்சி பெறுவதற்காகத்தான். ஆனால் இந்திய ஆட்சியாளர்களும், வடநாட்டு அதிகாரிகளும் மொழிவழி மாநில சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார்கள். ஆகவே பொன்மலை பணிமனையிலும் தமிழ்நாடு முழுவதுமுள்ள ரெயில்வேதுறையில் 10 சதவீதத்துக்கு மேல் உள்ள வெளிமாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும். அந்த இடங்களை தகுதியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் 90 சதவீதம் வேலை தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டும். அவற்றில் 10 சதவீதத்துக்கு மேல் உள்ள வெளிமாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி காலை 11 மணிக்கு தமிழ்த்தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதி தலைமையில் திருச்சி பொன்மலை பணிமனை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும். பொன்பரப்பி சம்பவத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, பொருளாளர் ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் கவித்துவன், மாநகர செயலாளர் இலக்குவன் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்