குடும்பத்துடன் தண்ணீர் தொட்டிக்குள் குதித்ததில் தொழிலாளி குழந்தையுடன் பலி

கடன் பிரச்சினை காரணமாக குடும்பத்துடன் தண்ணீர் தொட்டிக்குள் குதித்ததில் தொழிலாளி குழந்தையுடன் பலியானார். உயிர் தப்பிய மனைவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-04-25 23:15 GMT
பொங்கலூர்,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நடுப்புளி அருகே உள்ள சித்தூரை சேர்ந்த சிவசாமி என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 30). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தவமணி (30). இவர்கள் இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 3 வயதில் மோனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் சதீஷ்குமார் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே கவுண்டம்பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு குடிவந்தார். பின்னர் அங்கு தங்கி இருந்து விவசாய வேலைகளை கவனித்து வந்தார். கணவருக்கு துணையாக அவருடைய மனைவியும் இருந்து வந்துள்ளார்.

இந்த தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மற்றும் இதர பயிர்களுக்கு சொட்டுநீர் மூலம் பாசனம் செய்யப்படுகிறது. இதற்காக இவர்கள் குடியிருக்கும் வீட்டின் அருகே 20 அடி நீளம், 20 அடி அகலம் மற்றும் 11 அடி உயரம் கொண்ட தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் எப்பொழுதும் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி இருக்கும். இந்த தொட்டியில் இருந்துதான் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனத்திற்கான சிறிய குழாய்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தோட்டத்திற்கு குடிவந்தபிறகு தோட்ட வேலைகளை சதீஷ்குமார் முறையாக செய்து வந்தாலும், தனக்கு கடன் பிரச்சினை இருப்பதாக அருகில் உள்ளவர்களிடம் அடிக்கடி கூறி புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் சதீஷ்குமார் தனது குழந்தை மோனிகாவை கையில் வைத்துக்கொண்டு மனைவியுடன் வீட்டின் அருகே உள்ள தொட்டி மீது ஏறி நின்றுள்ளார். இதை அந்தவழியாக சென்ற ஒருவர் பார்த்துள்ளார். எதற்காக இவர்கள் தண்ணீர் தொட்டி மீது ஏறி நிற்கிறார்கள் என்று அவர் யோசிக்கும் முன்பே திடீரென்று சதீஷ்குமார் தனது குழந்தையுடன் தொட்டிக்குள் குதித்து உள்ளார்.

அவரை தொடர்ந்து அவருடைய மனைவியும் குதித்தார். நீச்சல் தெரியாததால் சதீஷ்குமார், குழந்தையுடன் தண்ணீரில் மூழ்கினார். தவமணி மட்டும் கையையும், காலையும் அசைத்தபடி “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று அபயக்குரல் எழுப்பி உள்ளார்.

இதனால் அந்தவழியாக சென்றவர் பதற்றம் அடைந்து அருகில் உள்ளவர்களை அழைத்து தொட்டிக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த தவமணியை மீட்டனர். அப்போதுஅவருக்கு நன்றாக சுய நினைவு இருந்தது. ஆனால் தொட்டிக்குள் மூழ்கியதில் குழந்தையுடன் சதீஷ்குமார் இறந்து விட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரின் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் எதற்காக தொட்டிக்குள் குதித்தீர்கள் என்று தவமணியிடம் கேட்டபோது “ கடன் பிரச்சினையால் நாங்கள் அவதிப்பட்டோம். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தொட்டிக்குள் குதித்தோம்” என்றார். மேலும் கணவரும், குழந்தையும் இறந்து விட்டதை அறிந்த தவமணி, துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதார். தரையில் உருண்டு புரண்டார். பின்னர் வீட்டிற்கு ஓடிய தவமணி, வீட்டில் தென்னை மரங்களுக்கு வைத்து இருந்த விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அவினாசிபாளையம் போலீசார் விரைந்து சென்று சதீஷ்குமார் மற்றும் மோனிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக சதீஷ்குமார் தற்கொலை செய்த கொள்ளும்முன்பு வீட்டில் கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளாரா? என்று போலீசார் அவருடைய வீட்டில் தேடினார்கள். அப்போது சதீஷ்குமார் எழுதி வைத்ததாக கூறப்படும் ஒரு கடிதத்தை கைப்பற்றினார்கள். அதில் “ சுய உதவிக்குழுவில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லையால் விவசாய கூலித்தொழிலாளி மகளுடன் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்