தளவாய்புரம் பகுதிக்கு, வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு - நீர்நிலைகள் வறண்டதால் ஏமாற்றம்

தளவாய்புரம் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. நீர்நிலைகள் வறண்டதால் இரை கிடைக்காமல் பறவைகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.

Update: 2019-04-25 22:00 GMT
தளவாய்புரம்,

தளவாய்புரம் அருகே உள்ள செட்டியார்பட்டி, முகவூர், சேத்தூர், தேவதானம், கிருஷ்ணாபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய் பகுதிகளுக்கு கொக்குகள், வெளிநாட்டு பறவைகள் இரைதேடி கூட்டம்கூட்டமாக வருவது அதிகரித்து உள்ளது. வெளிநாட்டு பறவைகளில் வெள்ளை நிறத்தில் கொக்குபோன்ற தோற்றத்தில் கழுத்தில் ஆரஞ்சு நிறம் கொண்ட பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன.

இவை இரை தேடிவிட்டு மாலை நேரங்களில் வானில் கூட்டம் கூட்டமாக பறந்து வட்டமிடுவது அழகாக உள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இரவு நேரங்களில் அடர்த்தியாக உள்ள மரங்களில் தங்கி ஓய்வு எடுக்கின்றன.

இந்த பறவைகள் ஆண்டுதோறும் கோடை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் இங்கு வந்து தங்கி இருந்து குஞ்சு பொரித்து விட்டு ஜூன் மாதம் குஞ்சுகளுடன் தங்களது தாய்நாட்டிற்கே திரும்பி சென்றுவிடும். இந்த பறவைகள் சுமார் 15 ஆண்டுகளாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆண்டுதோறும் கோடை காலங்களில் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. தற்போது விருதுநகர் மாவட்டத்திற்கு இந்த பறவைகள் வருகை தந்துள்ளன. ஆனால் தளவாய்புரம் பகுதியில் கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால் பறவைகள் இரை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றன.

மேலும் செய்திகள்